பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
09:06
நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ரூ. 43 லட்சம் செலவில் புதிதாக செய்த தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ராஜராஜசோழன் காலத்துக்கு முன் கட்டப்பட்ட ஹஸ்தாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் உள்ளது.
இக்கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதற்கான தேர் இல்லாததால் தமிழக அரசு புதிய தேர் செய்ய ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கி, தேர் கட்டும் பணிகள் நடந்து முடிந்தது.இதையடுத்து 119 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. கலசங்களில் புனித நீர் நிரப்பி யாகம் நடத்தி தேருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.அமைச்சர் கணேசன், வேல்முருகன் எம்.எல்.ஏ., சேர்மன் ஜெயந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர்.
ஆனி மாதம் பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் துணை சேர்மன் கிரிஜா, திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் காசிநாதன் த.வா.க., நகர செயலாளர் கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் ஆசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மகாதேவி, நகராட்சி கமிஷ்னர் பார்த்தசாரதி உட்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியே தேர் வெள்ளோட்டம் நடந்தது.