பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
04:06
அவிநாசி: விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் கன்னிமார் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பியநல்லூர் கிராமத்திலுள்ள கந்தம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் ஸ்ரீ கன்னிமார் மூர்த்திகளுக்கு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செம்பியநல்லூர் அடுத்த கந்தம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காட்டு கருப்பராயர் மற்றும் ஸ்ரீ கன்னிமார் மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா, நேற்று நான்காம் கால யாக பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாஹுதி, தீபாரதனை, திருமுறை இசைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து ஸ்தல சிவாச்சாரியார்களான கயிலைமணி அன்பு கிருபாகர சிவாச்சாரியர் முன்னிலையில், ஈசானபா அருள்நந்தி சிவாச்சாரியார் தலைமையில், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தினர். இதனையடுத்து, மகாதீபாராதனை, மகா அபிஷேகம், உபசார பூஜைகள், நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில், இலவசமாக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படிருந்தது.