பதிவு செய்த நாள்
04
ஜூன்
2022
09:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.
கோயிலில் நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் முடிந்து சுவாமி அருள் பாலித்தார். இந்த உற்சவம் ஜூன் 11வரை நடக்கும். விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 12 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுள்வர். திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தலையில் சுமந்து வரும் பால் குடங்களில் இருக்கும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 13 காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டை அரசியலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டை அரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி கோவிலுக்கு திரும்புவார். கொரோனா தடை உத்தரவால் கடந்த இரண்டு ஆண்டுகள் விசாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.