பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
03:06
பெரம்பலுார்: கங்கைகொண்ட சோழபுரம் அகழ்வாராய்ச்சியில் சோழர்கால அரண்மனையின் ஒரு பகுதி செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகை மேடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கின. இதில், முதல் கட்ட பணியின்போது, பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஓடுகள், இரும்பிலான ஆணிகள் சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், சிறிய அளவிலான அரிய பொருட்கள் கட்டிடங்கள் ஆகியவை கிடைத்தன. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டது. பழங்கால தமிழர்களின் வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 14 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி பழங்கால தங்க காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் 25ம் தேதி அகழாய்வு பணியின் போது பழங்கால மண் பானை, மண்ணாலான கெண்டி, செம்பின் மூக்குப் பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சோழர்கால அரண்மனையின் தொடர்ச்சியாக, 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த அரண்மனையின் தொடர்ச்சியாக தற்போது 9 அடி ஆழத்தில் செங்கல் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ள செங்கற்கள் 25 சென்டி மீட்டர் நீளமும், 13 சென்டிமீட்டர் அகலமும், 4.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டவையாக இருந்தன. இந்த சுவரானது மேற்கு புறம் 34 செங்கல் வரிசைகளும், வடபுறம் 32 வரிசைகளும், தென்புறம் 14 வரிசைகளும் கொண்ட சுவராக உள்ளது. இது பண்டைய காலத்தில் சுண்ணாம்பு சுதையால் கட்டப்பட்ட சுவர் ஆக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறிய ஆணிகள், கிளிஞ்சல்கள், கண்ணாடி மணிகள், சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சீன நாட்டின் பீங்கானால் தயாரான பொருளின் அடிபாகம் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. அகழாய்வு பணிகளில் தற்போது 40 தொழிலாளர்கள், அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் மேலும் அரிய பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு செல்கின்றனர்.