பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
03:06
புதுச்சேரி : புதுச்சேரி ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வருகை தந்த மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட திருக்குட முழுக்கு விழாவில் பங்கேற்க, மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.
அவருக்கு கோரிமேடு எல்லையில் சொக்கநாதன் பேட்டை, ரெயின்போ நகர், முத்தியால்பேட்டை உள்ளடங்கிய புதுச்சேரி மாநில நிர்வாகக் குழுவினர், மூன்று சக்தி பீடங்கள், 21 மன்றங்களின் பொறுப்பாளர்கள், பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஊசுட்டேரியில் உள்ள பண்ணை இல்லத்தில் ஓய்வு எடுத்த ஆன்மிக குரு, நேற்று காலை 7.௦௦ மணியளவில் காரில் புறப்பட்டு, சிதம்பரம் சென்றார்.காலை 9.௦௦ மணியளவில், ஆன்மிக குரு தலைமையில் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகர் சித்தர் சக்தி பீடத்திற்கு திருக்குடமுழுக்கு விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா முடிந்து, சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வருகை தந்து, கருவறை அன்னைக்கு தீபாராதனை செய்து, அருளாசி வழங்கினார். அங்கு குழுமியிருந்த செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.முன்னதாக கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.காலை 6.௦௦ மணியளவில், அன்னை அருளிய முறைப்படி சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வருகையையொட்டி புதுச்சேரியில் இரு நாட்களாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.