வைகாசி விசாகத்தில் திருச்செந்தூருக்கு சர்ப்ப காவடி கொண்டு வர தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 10:06
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி சர்ப்பக் காவடி எடுத்து வர போலீஸ் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். வைகாசி விசாகத்தையொட்டி ஜூன் 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதாரம், மின்வினியோகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதயாத்திரை பக்தர்களின் வருகையால் தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார் குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டனர். திருச்செந்தூரில் 120 சிறப்பு பஸ்கள் உட்பட 220 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சர்ப்பக் காவடி எடுத்து வருபவர்கள் பாம்புகளை பக்தர்கள் முன்னிலையில் கடலில் விடுகின்றனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி சர்ப்பக் காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.