தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 04:06
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினர்.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா 2ம் நாளான நேற்று கோயிலில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் தங்க பல்லாக்கில் புறப்பாடாகி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர்.
பின் மதியம் 2:15 மணிக்கு கோயில் குருக்கள் ராமாயண வரலாற்றை வாசித்தார். இதில், சீதையை விடுவிக்குமாறு ராவணனிடம் தம்பி விபீஷணர் வலியுறுத்தியும் கேட்காத ராவணன், விபீஷணரை அவமரியாதை செய்தார். பின் அங்கிருந்து வான்வழியாக தனுஷ்கோடி வந்திறங்கிய விபீஷணரை, ராவணனின் ஒற்றன் என வானர சேனைகள் கூறினர். உடனே ராமபிரான் அபயம் தேடி வருவோரை அடைக்கலம் கொடுப்பதே தர்மம் எனக்கூறி, தம்பி லட்சுமணனிடம் கடல் நீரை எடுத்து வர கூறினார். பின் இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து அவருக்கு புனிதநீர் ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனை நினைவு கூறும் விதமாக நேற்று ராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வு நடந்தது. பின் ராமருக்கு மகா தீபாராதனை நடந்ததும், கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் பஞ்சமூர்த்தி, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.