கோவில்பாளையம்: கோவில்பாளையம், சக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவில்பாளையத்தில் காவல் தெய்வமாக விளங்குவது பழமையான சக்தி மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 7ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி பக்தர்கள் ஆடும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று முன்தினம் (8ம் தேதி) இரவு அம்மன் அழைத்தலும், அணிக்கூடை எடுத்து வருதலும், சக்தி கரகம் அழைத்தலும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தலும், மாவிளக்கு ஊர்வலமும், பூவோடு எடுத்தலும் நடந்தது. பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து, அலகு குத்தி தேர் இழுத்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (10 ம் தேதி) காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகமும் நடக்கிறது.