பதிவு செய்த நாள்
04
ஆக
2012
11:08
தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா கோயில் அன்னையின் பெருவிழா நாளை நடக்கிறது. இதனை ஒட்டி தூத்துக்குடியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து பனிமய அன்னையை தரிசிக்க இறைமக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தூத்துக்குடியில் ஜாதி,மத, வேறுபாடின்றி பனிமயமாதா கோயில் விழா மதநல்லிணக்க விழாவாக பிரமாண்டமான முறையில் அனைத்து மத மக்களும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பாக நடந்து
வருகிறது. இந்த ஆண்டும் இந்த திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வருகிறது. தினமும் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து பொன்மகுடத்தில் ஜொலிக்கும் பனிமய அன்னையை தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர். எட்டாம் திருவிழாவான நேற்று தூய அந்தோணியார் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள், திருச்சிலுவை ஆங்கிலம் மற்றும் தமிழ் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், வெள்ளப்பட்டி, தருவைகுளம் பங்கு இறைமக்கள் மற்றும் இறை மக்கள் பங்கு பெற்ற நகர வின்செந்தியர்களுக்கான திருப்பலி, வணிக பெருமக்களுக்கான சிறப்பு திருப்பலி, உலக சமாதானதிற்கான சிறப்பு திருப்பலி, ஏழுகடல்துறை மக்களுக்கான திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான இறைமக்கள், பங்கு தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பங்கு தந்தைகள் பங்கேற்றனர். ஒன்பதாம் திருவிழாவான இன்று சிறப்பு திருப்பலி, இரவு ஆயர் தலைமையில் பெருவிழா ஆராதனை, ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவப்பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய திருவிழாவான பத்தாம் நாளான நாளை அன்னையின் பெருவிழா
கோலாகலமாக நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனை ஒட்டி நேற்றே கோயிலை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோத துவங்கி விட்டனர். கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு அன்னையை தரிசிக்க மக்கள் சாரை, சாரையாய் சென்றனர். இன்று இரவில் இருந்து இன்னும் அதிகமான கூட்டம் வரும் என்பதால் அதற்கு ஏற்ப நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நவீன காமிராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.நாளை காலை நான்கரை மணிக்கு முதல் திருப்பலியுடன் விழா துவங்குகிறது. ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் நடக்கும் சிறப்பு நன்றி திருப்பலியில் திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா பங்கேற்கிறார். மாலை ஆடம்பர திருப்பலியில் மதுரை ஆயர் பீட்டர் பர்ணாண்டோ பங்கேற்கிறார். இரவு ஏழு மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவை ஒட்டி தூத்துக்குடியே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.