பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
01:06
திருப்பூர்: வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சிவ கண வாத்தியம், வாண வேடிக்கையுடன் விமரிசையாக நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி, விமரிசையாக நடந்தது.சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்துடன், மலர் அலங்காரம் செய்த வாகனங்களில், 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்தனர். அதை தொடர்ந்து, திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.தேர் வீதிகளில், பந்தசேவை, வாண வேடிக்கை மற்றும் சிவனடியார்களின் சிவ கண வாத்திய இசையுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. 63 நாயன்மார்கள் எதிர்சேவை செய்தபடி செல்ல, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், கருட வாகனத்தில், திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் ஏமாற்றம்: பஞ்சமூர்த்தி புறப்பாடு அன்று, எம்பெருமாளுக்கு, பாதம் தாங்கி நடையழகுடன், மலர்ப்பல்லக்கு திருவீதியுலா நடக்குமென, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இருப்பினும், ஸ்ரீரங்கத்தில் இருந்து, 30 பாதம் தாங்கி நடையழகுகளை வரவழைக்கும் முயற்சி தடைப்பட்டுள்ளது. நேற்றைய, சுவாமி புறப்பாட்டின் போது, சுவாமி வழக்கம் போல் கருடசேவை சாதித்தபடி, திருவீதியுலா சென்றதால், பெருமாள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.