பதிவு செய்த நாள்
11
ஜூன்
2022
03:06
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பணிகள் வேத மந்திரங்கள் ஒலிக்க கணபதி ஹோமத்துடன் கோயில் வளாகத்தில் நடந்தது.
இக்கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடந்தது 20 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. கோயில் கும்பாபிஷேகத்தை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் கலைவாணன், துணை ஆணையர் கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் நதியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை துவக்கியுள்ளனர். நேற்று முதல் கட்டமாக கோயில் வளாகத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜையாக பாலாலய பூஜை நடந்தது. கோபுர கலசம் மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. செயல் அலுவலர் நதியா கூறியதாவது: ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேகப் பணிகளை முடிக்க இந்து அறநிலைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் மேற்குப்புறம் பக்தர்களுக்கான நிரந்தர நிழற்கூரை, படிகள், விநாயகர் சன்னதி பராமரிப்பு, சிற்பங்கள் பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல், தேவையான இடங்களில் தட்டு ஓடுகள் பதித்தல், முருகன் சன்னதியில் புகைப்படலங்களை நீரால் சுத்தப்படுத்துதல், கருப்பசாமி சன்னதியில் விமானம் சீரமைத்தல், கைப்பிடியுடன் கூடிய படிகளை சீரமைத்தல், குதிரை சிலை பராமரிப்பு, பக்தர்களுக்கான கூடுதல் குடிநீர் வசதி ஆகியவற்றை இன்னும் சில மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு கூறினார்.