பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
10:06
திருக்கோவிலூர்: வைகாசி விசாக நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீசபெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் திருநட்சத்திரமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:30 மணிக்கு தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட சேவையில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, திவ்ய பிரபந்த பாசுரம் சேவித்து சாற்றுமரை நடந்தது. மாலை 6:00 மணி அளவில் வசந்த உற்சவ விழா விழாவின் ஒரு பகுதியாக புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். கர்நாடக சங்கீத கச்சேரியை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில், விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.