பதிவு செய்த நாள்
13
ஜூன்
2022
11:06
திருப்பூர்; திருப்பூரில், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ஓம் நமசிவாய கோஷம் விண்ணதிர, தேர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது.திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, 5ல் கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 6ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது.நிலையில் நின்றிருந்த விநாயகர் தேரில், அலங்காரத்தில், விநாயகர், சண்டிகேஸ்வரர், சூலதேவர் எழுந்தருளியிருந்தனர். ஸ்ரீவிஸ்வேஸ்வரர் தேரில், விசாலாட்சியம்மனுடன், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தன.
தேரோட்டத்தை, மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தனர். ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் செயல் அலுவலர் முன்னிலை வகித்தனர்.முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.ஞாயிறு விடுமுறை என்பதால், பக்தர்கள் பலர், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விநாயகர் தேர் முன் செல்ல, சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன் வீற்றிருந்த தேர் வாத்திய மேளங்களுடன் வீதிகளில் பவனி வந்தது.அசைந்தாடி வந்த தேருக்கு முன், பெண்களின் கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், ட்ரம்ஸ் இசை முழக்கம், நாதஸ்வர மேள தாளம், செண்டை மேளம் என, வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.சமய குரவர் நால்வரின் வேடமணிந்து சிறுவர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு குடிநீர், ஜூஸ், இனிப்பு, புளிசாதம், பொங்கல், சாக்லேட் உள்ளிட்டவை பக்தர்கள் வழங்கினர். பெருமாள் கோவில் அருகில் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய ஜவுளிக்கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, பூக்கடை கார்னர் வழியாக மாலை தேர் நிலையை வந்தடைந்தது.வழி நெடுகிலும் வீதிகளின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் விஸ்வேஸ்வரரை கோஷங்கள் எழுப்பியபடி வழிபட்டு, பக்தி பரவசத்தில் மூழ்கினர். போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிசிடிவி கண்காணிப்பு
தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதன் முறையாக, தேருக்கு முன்னதாக சிறப்பு வாகனத்திலிருந்து நான்கு புறமும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
துாய்மை பணி சபாஷ்
நிலையில் இருந்து தேர் கிளம்புவதுக்கு முன்னதாகவே, வீதிகளை துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, தேர் வீதிகளில் பவனி வரும் போது, அதற்கு பின்னால், உடனுக்குடன், 30க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதற்கு என, தனிக்குழுவை மாநகராட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.தேரோட்டத்தையொட்டி, அப்பகுதியில் தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோவில் முன்பும் மற்றும் தேரின் பின்பும் தீயணைப்பு வாகனம் வந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டனர்.மக்கள் கூட்டத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, மப்டி போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தேரோட்டம்
இன்று, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டு உள்ளனர். மாலை, 3:30 மணியளவில் பெருமாள் கோவில் தேர்வடம் பிடித்து பக்தர்கள் இழுக்க உள்ளனர்.