திருப்புத்தூரில் வைகாசி விசாக விழா : 14 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 04:06
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தெப்பத்துடன் வைகாசி விசாக விழா நிறைவடைந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைசாக விசாக பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி சுவாமியும் அம்பாளும் வாகனங்களில் இரவில் திருவீதி உலா வந்தனர். ஜூன் 6 ல் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டு, ஜூன்7 ல் திருக்கல்யாணம், ஜூன் 10 ல் காலையில் நடராஜர் புறப்பாடு, ஜூன் 11ல் தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் பத்தாம் திருநாளை முன்னிட்டு தெப்ப உத்ஸவத்திற்காக காலை சீதளிக்குளத்தில் தீர்த்தம் வழங்குதல் நடந்தது. இரவில் பஞ்சமூர்த்திகளும் தெப்பமண்டபத்தில் எழந்தருளினர். இரவு 9:30 மணி அளவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பம் சீதளிக்குளத்தில் மும்முறை வலம் வந்தது. குளத்தில் நீர் பெருகாதது, கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் தொடர்ந்து 14 ஆண்டுகளாக தெப்பம் நடக்கவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தெப்பத்தை பக்தர்கள் திரளாக குளத்தைச் சுற்றி நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சமூர்த்திகளும் திருவீதி வலம் வந்து கோயிலில் எழுந்தருளலுடன் வைகாசி விசாக விழா நிறைவடைந்தது.