மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் தொங்கும் பூட்டுகள், பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2022 10:06
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் பலரும் பூட்டுகளை வைத்து பூட்டி செல்வதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பத்ரகாளியம்மன் சன்னதியில் நெய் விளக்கேற்றுவதை கோயில் நிர்வாகம் தடை செய்து கோயிலுக்கு வெளியே தனியாக மேடை அமைத்தது. அதில் பலரும் பூட்டுகளை வரிசையாக போட்டு பூட்டி செல்வதால் நெய்விளக்கேற்ற முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பூட்டிவிட்டு சாவியையும் உண்டியலில் போட்டு விட்டு செல்கின்றனர். உண்டியல் காணிக்கையை எண்ணும் போது சாவிகளை எடுத்து பூட்டுகளை திறக்க வேண்டியுள்ளது. போதிய கண்காணிப்பு இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கோயிலுக்கு வெளியே நெய் தீபம் ஏற்றுவதால் போதிய பாதுகாப்பும் இல்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நேர்த்திகடனாக பூட்டுகளை போடுவதை தடை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.