பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
08:06
மதுரை : தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயிலில் திருடப்பட்ட ஐம்பொன்னால் ஆன நந்திகேஸ்வரர், கங்காளமூர்த்தி சிலைகளை 37 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து மீட்டு மதுரையில் கோயில் நிர்வாகிகளிடம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, ஐ.ஜி., தினகரன் ஒப்படைத்தனர்.
ஹிந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள இக்கோயிலில் உற்ஸவர்களாக வலம் வந்த இச்சிலைகள் 1985ல் திருடுபோயின. இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என 1986ல் வழக்கை முடித்தனர். பின்னர் இவ்வழக்கை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எடுத்து விசாரித்தது. வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தபோது அமெரிக்கா மியூசியம் ஒன்றில் சிலைகள் இருப்பது தெரிந்தது. 1985ல் எடுக்கப்பட்ட நந்திகேஸ்வரர், கங்காளமூர்த்தி சிலைகளின் போட்டோவை ஆதாரமாக கொண்டு போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மத்திய அரசின் உதவியோடு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்கப்பட்ட சிலைகள் நேற்று மதுரை கொண்டு வரப்பட்டன. ஆழ்வார்குறிச்சி கோயில் நிர்வாகிகளிடம் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி, ஐ.ஜி., தினகரன் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., மலைச்சாமி, கோயில் செயல் அலுவலர் கண்ணதாசன் உடனிருந்தனர். கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை அமைச்சு பணியாளர்கள் ஆர்வமுடன் வந்து வணங்கினர்.
நல்ல நேரத்திற்காக காத்திருந்த டி.ஜி.பி., : சிலை ஒப்படைப்பு தொடர்பான பிரஸ்மீட் காலை 11:00 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதியம் 12:00 மணி வரை அதற்கான அறிகுறியே இல்லை. பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு கமிஷனருடன் டி.ஜி.பி., பேசிக்கொண்டிருக்கிறார். இதோ வந்துவிடுவார் எனக்கூறி சமாளித்தனர். பின்னர் மதியம் 12:10 மணிக்கு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி வந்து பிரஸ்மீட் கொடுத்து, சிலைகளை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை ராகு காலம் என்பதால், அந்நேரத்தில் சிலைகளை ஒப்படைக்க வேண்டாம் எனக்கருதியே டி.ஜி.பி., காத்திருந்தது தெரிந்தது.