பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
08:06
இயந்திரங்கள் கூட ஓய்வெடுக்கும்... ஆனால் இயந்திரமாக நாம் ஓய்வின்றி ஓடி கொண்டே தானே இருக்கிறோம். ஓட்டத்தில் மனஅழுத்தம், நோய்கள், வலி, சோர்வு, பதட்டம் என நம் உடல் பல இடையூறுகளை சந்திக்கிறது. இந்த இடையூறுஇடர்களை களைய ஆஹா என ஆச்சரியப்பட வைக்கும் அற்புத விளைவுகளை தருவது யோகாசனங்கள். தினமும் யோகாசனம் செய்தால் ஓஹோவென ஆரோக்கியத்தைபெறலாம் என்பது யோகா செய்பவர்களின் அனுபவம். சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) மதுரையை சேர்ந்த சிலர் தங்கள் யோகா அனுபவம் குறித்து மனம்திறக்கிறார்கள்.
*தைராய்டு பிரச்னை சரியானதுபூர்ணிமா, குடும்பத்தலைவி: தைராய்டு பிரச்னையால் மருந்துகளை சாப்பிட்டு வந்தேன். யோகா செய்தால் தீர்வு கிடைக்கும் என 4 ஆண்டுகளாக செய்கிறேன். ஓராண்டுக்கு முன் சரியானது. சிகிச்சையைவிட்டு விட்டேன். ஆனால் யோகாவை விடவில்லை.வீரபத்ராசனம், திரிகோணாசனம், பத்மாசனம் தவறாமல் செய்கிறேன்.
*முதுகு வலி குறைந்து விட்டதுசெல்வி, குடும்பத்தலைவி: சமையல் உட்பட வீட்டு வேலைகளில் எப்போதும் ஈடுபடுவதால் முதுகுவலி வந்து விட்டது. ஆறு மாதங்களாகமுதுகு வலியில் சிரமபட்ட நான் யோகா செய்ய துவங்கினேன். இரண்டு மாதங்களுக்கு முன் வலியும் குறைந்து விட்டது. புத்துணர்ச்சியும் கிடைப்பதால் வேலைகளை விரும்பி செய்கிறேன். மகள் ஹரிணி மீனாவுக்கும் யோகாவைகற்று தருகிறேன்.
* உடல் எடை சீராகவே உள்ளதுநிஷா, குடும்பத்தலைவி: பெரியளவு யோகா பயிற்சி பெறவில்லை என்றாலும் யூ டியூப், இணையதளம் வழியில் ஓரளவுக்கு கற்று கொண்டேன்.
அந்த அனுபங்களை வைத்து தினமும் யோகா செய்கிறேன். சில ஆண்டுகளாகவே உடல் எடை சீராக உள்ளது. மூட்டு, கை, கால்கள் வலிகள்இல்லை. குறித்த நேரத்தில் பசிக்கிறது, துாக்கம் நன்றாக வருகிறது.
* ஊரடங்கில் கற்றேன் யோகாலட்சுமி பிரியா, ஐ.டி. அலுவலர்: சென்னை ஐ.டி., கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறேன். கொரோனா ஊரடங்கிற்கு மதுரை வந்த போது காந்தி மியூசியத்தில் முதுகலை யோகா படித்தேன். அதிலிருந்து தொடர்ந்து யோகா கலையை நேசிக்க துவங்கி விட்டேன். 40 நிமிடம் யோகா செய்தால் போதும் சில கி.மீ., ஓடியதற்கு சமம். உணவு பழக்கமும் மாறி விட்டது. சோர்வு இல்லவே இல்லை.
*கர்ப்பகால சோர்வை நீக்கும் யோகாடாக்டர் அமுதா, மதுரை சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா, ஆயுஷ் மருத்துவர்: யோகா செய்வதால் மனதை, உடலை இணைத்து ஆரோக்கியம் பெறலாம். ரத்த அழுத்தம் சீராகி, மன அழுத்தம் குறையும். கர்ப்பகாலங்களில் யோகா செய்தால் ரத்த சோகை, முதுகு, கழுத்து வலி, செரிமான பிரச்னை, கால் வீக்கம் வராது. சோர்வை நீக்கி திசுக்களை தளர்வடைய செய்து, நரம்புகளை சீராக்கி, புத்துணர்வு பெற செய்யும். ரத்த அடைப்பை போக்கி, இதயத்தை வலிமையாக்கும். உடல் எடையையும் குறைத்து அழகான தோற்றத்தைதரும். யோகாவுடன் மூச்சு பயிற்சிகளும் செய்வதால் நுரையீரல்கள் சீர்படுத்தப்பட்டு சுவாசம் சீராகும்.
* உடல் ஆரோக்கியத்தின் பொக்கிஷம்கங்காதரன், இயக்குனர், மகாத்மா காந்தி யோகா நிறுவனம்: உளவியல் துறையில் யோகாவின் பங்கு மிக முக்கியமானது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதற்கு யோகா உதவுகிறது. நாள்பட்ட உடல் பிரச்னை, ரசாயன மாற்றங்கள், மரபணு, மனநோய்க்கு அடிப்படை காரணங்களுக்கு தீர்வாக இருக்கிறது. மனஅழுத்த மேலாண்மைக்கு யோகா, பிராணயாம பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. உடலை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்திருக்க ஆசனங்கள் பொக்கிஷமாக உதவுகின்றன. உடலில் உள்ள அனைத்து மண்டலங்களையும் சரியாக இயக்குவதற்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கவும், செல் தேய்மானத்தை குறைத்து இளமையோடு வாழ்வதற்கும் யோகாசன பயிற்சிகள் உறுதுணையாக இருக்கின்றன.