பதிவு செய்த நாள்
25
ஜூன்
2022
11:06
நரங்சிங்கபுரம்:நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று, கருடசேவை வாகனத்தில் உற்சவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால், பிரம்மோற்சவ விழா தடைபட்டிருந்தது.இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், இம்மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு பத்தி உலாத்தலும், ஆண்டன் சன்னிதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.ஆனி பிரம்மோற்சவ மூன்றாம் நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு கருடசேவை வாகனத்தில், லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 28ம் தேதி, காலை 7:15 மணிக்கு நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.