பதிவு செய்த நாள்
09
ஆக
2012
10:08
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று, ஆடு, கோழி பலியிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தினர். எட்டுப்பேட்டையை காவல் காப்பதில், முதன்மை எல்லை தெய்வமான, சேலம் கோட்டை மாரியம்மன் ஆடிப்பெருவிழா, கடந்த 24ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.தினசரி அதிகாலை 4.30 மணியளவில், அபிஷேக, ஆராதனைக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் அம்மன், இரவில், விசேஷ வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். ஆடி 25வது நாளான நேற்று, 2 வது நாளாக, தங்கக் கவசத்தில் அம்மன் வீற்றிருந்தார். கோவில் தெற்கு கோபுரவாசல் வழியாக, பக்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், நான்கு வரிசைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.ஆண்கள், பெண்களுடன், குழந்தைகளும், பக்தி பரவசத்துடன், கோவில் உட்பிரகார பகுதியில், அங்கப்பிரதட்சனம் செய்தனர். அலகுகுத்தி வந்த பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டும், நேர்த்திக்கடன் செலுத்தினர். அதோடு, அம்மனுக்கு மிகவும் பிடித்தமான கம்பங்கூழ், ராகி கூழ் ஊற்றி பிரார்த்தனை செய்தனர். ஆடிப்பெருவிழாவையொட்டி, கோவிலை சுற்றிலும், வளையல் கடைகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைகள், பலூன் கடைகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தது. சாமி தரிசனத்துக்குபின் வீடு திரும்பிய பக்தர்கள், குழந்தைகளுக்கு தேவையான பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கு தேவையான வளையல்கள் வாங்கிச் சென்றதால், வியாபாரம் களை கட்டியது. பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, போக்குவரத்து மாற்றப்பட்டு, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள் அனைத்தும், ஆட்கொல்லி பாலம் வழியாக வந்து, செல்ல அனுமதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், 248 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்பக்தர்கள் கூட்டத்தில், திருடர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்கும் விதமாக, ஏராளமான போலீஸார், மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று அதிகாலை ஐந்து மணிக்கு அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனைக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 6 மணியளவில், குதிரை வாகனத்தில், வீதியுலா வருகிறார்.