பதிவு செய்த நாள்
27
ஜூன்
2022
04:06
அறம் செய விரும்பு
இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்
ஒரு செயலைச் செய்வதற்கு முதலில் அந்தச் செயல் சார்ந்த எண்ணம் வேண்டும். பிறகு அந்த எண்ணத்தையே ஆழமாகச் சிந்தித்து விருப்பப்பட வேண்டும். விருப்பம் அதிகமானால் அதுவே செயலாக மாறி விடும். அது நல்லனவாக இருந்தாலும் சரி, அல்லனவாக இருந்தாலும் சரி, இரண்டுக்கும் ஒரே விதி தான்.
எனவே அவ்வையார் ‘அறம் செய விரும்பு’ என்றார். தர்மம் செய்ய ஆசைப்படு. அறச்செயல்கள், தர்மம் என்றவுடன் உடனே நாம் அதனைப் பொருளாதாரத்தோடு பொருத்திப் பார்க்கிறோம். தர்மம் செய்வதற்குப் பணம் வேண்டுமா என்றால் வேண்டும்தான்... ஆனாலும் பொருள் இல்லாமலும் தர்மம் செய்யலாம். அது எப்படி முடியும்? காஞ்சி மஹாபெரியவர் நமக்கு நல்வழி காட்டுகிறார். சாலையில் போகும் போது நம் கண்ணுக்கு முன்னால் கிடைக்கும் கல்லையோ அல்லது முள்ளையோ எடுத்து ஓரமாகப் போடலாம். விடிந்தவுடன் அல்லது பகலில் தேவையின்றி இயங்கும் மின்சாதனங்களை நிறுத்தலாம். சாலை ஓரங்களில், வீட்டில் வழிந்தோடும் தண்ணீர்க்குழாயை அடைக்கலாம். ஊர்ப்பெயரின் அறிவிப்பு பலகையின் மீது ஒட்டியிருக்கும் போஸ்டர்களைக் கிழித்து சுத்தம் செய்யலாம். இவற்றுக்கெல்லாம் பணம் வேண்டாம். உதவுகின்ற மனம் இருந்தால் போதும்.
‘‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’’ என்றார் திருமூலர். அதனடிப்படையில் துவங்கப்பட்டது தான் பிடி அரிசித்திட்டம். நாம் நம் வீட்டில் சமையல் செய்யும் போது நமது கைப்பிடி அளவு அரிசியை எடுத்து (புழுங்கல் அரிசியானாலும் கூடப் பரவாயில்லை) ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டே வந்தால் அது நிரம்பியவுடன் நாமே சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம். அல்லது அன்னதானம் நடத்துபவர்களிடம் அரிசியைக் கொடுக்கலாம். நம் வீட்டில் பாத்திரம் துலக்க, சுத்தம் செய்ய வரும் பணியாளர்களுக்கு கொடுக்கலாம். தெருவைச் சுத்தம் செய்யும் துாய்மைப் பணியாளர்களுக்குக் கொடுத்து மகிழலாம். இதற்கும் தேவை உதவும் மனம் தானே.
செல்வம் மிகுந்தவர்கள் நிறையப் பணம் தாருங்கள். செல்வம் குறைந்தவர்கள் காசுகள் தாருங்கள். என்னால் பொருளாதார ரீதியாக உதவ முடியாது என்றால் உடல் உழைப்பினைத் தாருங்கள். அதுவும் முடியவில்லையா வார்த்தைகளினால் கூட உதவலாம். வாருங்கள் எப்படியாகிலும் இந்த நற்செயலைச் செய்வோம் என்கிறார் பாரதியார்.
வார்த்தைகளால் எப்படி உதவ முடியும்? நமக்குத் தெரிந்தவரின் குழந்தை படிக்கப் பணம் வேண்டும். நாம் உதவும் சூழலில் இல்லை. நமக்குத் தெரிந்த உதவும் நண்பர்களோ அல்லது சமூகச் சேவை சங்கங்களோ இருக்கும். அவர்களிடம் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களின் சுயகவுரவம் பாதிக்காத வகையில் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி கல்விக்காக உதவி செய்யச் சொல்லி படிக்க வைக்கலாம்.
திருமணம் நடக்க இருக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்காக திருமணம் தொடர்பாக உதவும் நபர்கள், அறக்கட்டளையினரை அணுகி உதவி பெற்றுத் தரலாம். இவை போல மருத்துவ உதவி, இறுதிச் சடங்குகளுக்கான உதவி என வார்த்தைகள் மூலமே நம்மால் செய்திட இயலும். ஏராளமானோர் செய்து கொண்டும் இருக்கின்றார்கள். கால்நுாற்றாண்டிற்கு முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. இப்போதும் சில ஊர்களில் இருக்கின்றது. கோயிலுக்குப் போகும் போது விளக்கேற்ற எண்ணெய், திரி, அகல் விளக்கு எடுத்துச் செல்வதைப் போல சிறிய டப்பாவில் அரிசிக் குருணையும் (உடைந்த அரிசி) சிறிது வெல்லத் துாளும் கலந்து எடுத்துச் செல்வார்கள். கோயிலின் ஓரங்களில் தல விருட்சங்களைச் சுற்றியிருக்கும் எறும்புகளுக்கு இதனை உணவாகப் போட்டு விட்டு வருவார்கள். அன்னதானம் என்றால் மனிதன் சாப்பிடுவது என்று மட்டுமல்ல, எந்த உயிரினத்திற்குக் கொடுத்தாலும் அது அன்னதானம் தானே!
இன்றும் மூட்டைக் கணக்கில் நல்ல பழக்கங்கள், காய்கறிகள் இவற்றை வாங்கிக் கொண்டு போய் அடர்ந்த காடுகளின் எல்லையில் இருக்கும் குரங்குகளுக்கு உணவாக வழங்குபவர்கள் ஏராளம். நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் மரங்களில் பெரும்பான்மை வெட்டப்பட்டதால் உணவின்றி அலையும் குரங்குகளுக்கு இச்செயல் பெரிய உதவியாகும்.
இன்றும் சிலர் கற்பாறைகளால் ஆன நீர்த்தொட்டிகளைக் கொண்டு போல் காடுகளுக்கு நடுவில் போடுவார்கள். மழை பெய்யும் போது நீர் நிரம்பி விலங்குகள் தாகம் தீர்த்திட இவை உதவுகின்றன. செம்பாறாங்கல் என்ற சொரசொரப்பான கற்களை உயரமாக நட்டு வைப்பார்கள். விலங்குகள் முதுகு மற்றும் உடல் சொரி்ந்து கொள்வதற்காக. இவையெல்லாம் வெளியில் தெரியாத, ஆடம்பரம் இல்லாத தர்மங்கள் இன்றும் நடக்கின்றன.
மழைக்காலங்களில் சாலையோரங்களில் படுத்திருப்பவர்களுக்கு அவர்கள் துாங்கும் போது அவர்கள் அறியாமல் அவர்கள் மீது புதிய போர்வைகளைக் கொண்டு சென்று இன்றும் போர்த்தி விடுபவர்கள் ஏராளம்.
மனநலமின்றி தெருவில் திரிபவர்களை வலுக்கட்டாயமாக முடி திருத்தி, குளிக்க வைத்து உடை மாற்றி விடுபவர்கள் ஏராளம். தெரு நாய்களுக்கு உணவும், மருந்தும் தருபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
தர்மம் என்பதைப் பணத்தோடு இணைக்க வேண்டாம். மனம் விரும்பி சின்னச் சின்ன உதவிகளில் ஈடுபடும் தாய் உள்ளத்தை வளர்த்துக் கொள்வோம். பிறரின் மகிழ்ச்சியே நமது மனநிறைவு என சிந்தனையோடு வாழ்வில் பயணம் செய்வோம். இதுவே அறம் செய விரும்பு என்பதன் ஆரம்பமாகும்.