காஞ்சிபுரம்:தாமல் திரவுபதியம்மன் கோவிலில், மஹாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி, அர்ஜுனன் தபசு உற்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராமத்தில் தென்பாரிச இரண்யா குளக்கரையின் மீது திரவுபதியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத மகோற்சவ விழா, கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 23 முதல், தாமல் மந்தவெளி தெருவில், திருவண்ணாமலை மாவட்டம், மேல்பேட்டை மந்தைவெளி அம்மன் நாடக மன்றத்தினரின் கட்டை கூத்து மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கூத்து கலைஞர், தபசு மரத்தில் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.விழாவில், தாமல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.முக்கிய நிகழ்வாக ஜூலை 3ல், காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.