பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
08:07
திருத்தணி : முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை ஞாயிறு என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிப்பட்டு செல்கின்றனர். இம்மாதம், 23ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பம் நடக்கவுள்ளது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதாலும் நேற்று அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர் அதே போல், 100 மற்றும் 150 ரூபாய் டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களும் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். முன்னதாக, அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணி வெள்ளிமயில் வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மீண்டும் தரிசனத்தில் தில்லு முல்லு : கோவில் துணை ஆணையராக விஜயா பொறுப்பேற்ற பின்பு இரு மாதத்திற்கு மேலாக மூலவர் சன்னதியில், பக்தர்கள் யாரையும் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதித்து கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இருப்பினும் சில கோவில் ஊழியர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மூலவர் சன்னதிக்கு அருகே அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். இதை கோவில் துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.