மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களில் ஞானத்திற்கான வடிவம் ஹயக்ரீவர். ஹயம் என்றால் குதிரை. க்ரீவம் என்றால் கழுத்து. குதிரை முகம் தாங்கிய வடிவத்திற்கு ஹயக்ரீவர் என்று பெயர். சிவாலயங்களில் ஞானவடிவமாக தென்முகக்கடவுளாகிய தட்சிணாமூர்த்தி இருப்பதுபோல், பெருமாள் கோவில்களில் ஹயக்ரீவர் ஞான தெய்வமாக விளங்குகிறார். இவரே சர்வ வித்தைகளுக்கும் ஆதாரமானவர். ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உணர்விக்கும் அன்னையாக விளங்கும் சரஸ்வதிக்கு குருவும் இவரே. ஆச்சார்யார்களில் ஒருவரான நிகமாந்த தேசிகருக்கு உபாசனா மூர்த்தியாக இருந்தார். அகத்திய முனிவருக்கு லலிதா திரிசதியையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் உபதேசித்தவர் ஹயக்ரீவர். மாணவர்கள், சிறந்த குருவினை தேடி அலைபவர்கள், பேச்சுத்திறன் விரும்புவோர், பேசுவதில் குறைபாடுடையோர் ஆடி மாதத்தில் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.