நரகத்தைத் தடுக்கும் பாடல்கள்ஆதிமூலமே என்று சரணடைந்த கஜேந்திரன், இருகைகளையும் குவித்து கோவிந்தா என்று கூவி அழைத்த திரவுபதி ஆகியோரைக் காக்க ஓடோடி வந்தார் மகாவிஷ்ணு. திருமால் பெருமைக்கு நிகரில்லை; அவன் திருவடி நிழலுக்கு இணை இல்லை என்பது ஆழ்வார்களின் வாழ்வியல் அனுபவம். திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், தில்லை (சிதம்பரம்) சித்ரக்கூடம் ஆகிய ஐந்து திவ்யதேசங்களிலும் ராம, கிருஷ்ண அவதாரங்களை தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். உன் திருவடியை விட்டால் எனக்கு வேறு கதியில்லை, என்று வித்துவக்கோட்டில் பெருமாள் மீது பாடிய பாடல்கள் சிறப்பானவை. தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே எண்ணி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் பிரஜை, மருத்துவனையே நம்பியிருக்கும் நோயாளி போன்று நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக! என்று பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் நரகம் அடையமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.