திருப்பூர்: சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் சார்பில், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ஊருடையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்று, 11 சில்வர் தட்டுகளில் சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட ஸ்ரீ ஊருடையம்மன் ஸ்ரீ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேக அழைப்பிதழ் சுற்று வட்டாரத்தை சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டது.
சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், 15 வேலம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளி வாசல் மற்றும் மதரசா சார்பில், பள்ளி வாசல் தலைவர் ஹாஜி அப்துல் சமது தலைமையில் செயலாளர் முஹம்மது ரபீக், பொருளாளர் முஹம்மது சித்திக் ஆகியோர் முன்னிலையில் 20க்கும் மேற்பட்டோர் பள்ளி வாசலில் இருந்து, 11 சில்வர் தட்டுகளில் சீர் வரிசையாக கொண்டு சென்றனர்.
சுவாமிக்கு மாலைகள், பழங்கள், தேங்காய், இனிப்பு, வெற்றிலை, சந்தனம் ஆகியன இருந்தன. ஊர்வலமாக, ஒரு கிலோ மீட்டர் சென்று கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். அவர்களை நிர்வாகிகளை வரவேற்று, கோவிலை சுற்றி காட்டி மகிழ்ந்தனர்.