சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாதத்திற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில், ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. அதை முன்னிட்டு இன்று மாலை, அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடக்கிறது. நாளை காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் கொடியேற்ற விழா நடக்கிறது.விழாவின் இரண்டாம் நாளான, 8ம் தேதி இரவு, சிம்ம வாகனத்தின் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். 9ம் தேதி கருடசேவையும், மாலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின், 5ம் நாள் விழாவான, 11ம் தேதி இரவு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் பிரதான நாளான, 13ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. அன்று இரவுதோட்டத்திருமஞ்சனம் நடக்கிறது.வரும், 15ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி முதல் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.