பதிவு செய்த நாள்
29
ஜன
2026
01:01
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ஆதிதிருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை விட மிக பழமை வாய்ந்த இக்கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான (27 அடி நீளம்) நவபாஷனத்தில் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் அருள்பாலிக்கிறார்.
மூலவர் அரங்கநாத பெருமாளுடன் கருடாழ்வார், சரஸ்வதி, பிரம்மா, ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள பெரிய அளவிலான தானியக்களஞ்சியம், அருகில் உள்ள தென்பெண்ணை ஆறும் கோவிலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.
மூலவர் சிலைக்கு 15 – 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலகாப்பு கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால், கடந்த 1976ம் ஆண்டுக்கு பிறகு தைலகாப்பு செய்யவில்லை. கடந்த 2009ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு மட்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பல ஆண்டுகளாக புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் உட்பிரகாரம், மதில்சுவர், தானியக்களஞ்சியம் சேதமடைந்தும், மூலவர் சுவாமிக்கு தைலகாப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
கோவிலுக்கு புதிய தேர் தயார் செய்ய ப க்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால் கோவில் புனரமைப்பு, தைலகாப்பு மற்றும் புதிய தேர் உருவாக்க அறநிலையத்துறை நிதி ஒதுக்கி கடந்த ஆண்டு திருப்பணிகள் துவங்கியது.
கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்., மாதம் வேள்ளோட்டம் நடந்தது.கோவிலில் பெரும்பாலான பணிகள் முடிந்ததால், கும்பாபிஷேக பூஜை கடந்த 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, யஜமான சங்கல்பம், புண்ணியாகவஜனம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, அக்னி பிரதிஷ்டை நடந்தது. 27ம் தேதி மகா சாந்தி, சப்த கலச ஸ்நாபனம், மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை 10.05 மணியளவில் மூலவர் சன்னதி, ரங்கநாயகி தாயார் சன்னதி, ராஜகோபுரம் உட்பட அனைத்து கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.