பதிவு செய்த நாள்
29
ஜன
2026
01:01
வாலாஜாபாத்: தம்மனுார், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், 87 லட்சம் ரூபாயில் புனரமைப்புக்கான பணிகள் நேற்று துவங்கப்பட்டன.
வாலாஜாபாத் வட்டாரம், தம்மனுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் நிர்வாக சீர்கேடு காரணமாக, 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது.
மேலும், கோவில் கட்டடம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு, விமான கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் சிதிலம்அடைந்துள்ளது.
எனவே, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபி ஷேகம் செய்ய அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அதையடுத்து, இக்கோவிலில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 87 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, கோவில் திருப்பணி துவக்க கடந்த ஆண்டு, ஜூ லை மாதம் பாலாலயம் நடைபெற்றது.
எனினும், பாலாலயம் முடிந்தும் அடுத்த கட்டப் பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
திருப்பணி செய்ய கோரிய டெண்டர் சில காரணங்களால் ரத்தானதாகவும், பின், ஒப்பந்த புள்ளிக்கான பதிவில் பொதுப்பணித் துறை சார்ந்த அதிகாரி மற்றும் பணி மேற்கொள்ளும் ஸ்தபதிகள் பெயர் பதிந்து மறு டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊராட்சி நிர்வாகிகள், பக்தர்கள், பொது மக்கள் முன்னிலையில் கோவில் கட்டுமானத்திற்கான திருப்பணி பல்வேறு பூஜைகளுடன் நேற்று காலை துவங்கப்பட்டன.