பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
03:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன், நடனப்பந்தலில் நடனமாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் எழுந்தருள செய்யப்பட்டு, ஏககால லட்சார்ச்சனை நடந்தது.நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் மற்றும் மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிகள் மீண்டும் எழுந்தருள செய்யப்பட்டு, காலை 6:00 மணி முதல் 10:00 வரையில் திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.சித்சபையில் உற்சவ ஆச்சாரியார்கள் ரகசிய பூஜை நடத்தினர். பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், துணைச் செயலாளர் சேது அப்பாச்செல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் கனகசபாபதி தீட்சிதர் செய்திருந்தனர்.எஸ்.பி., சக்திகணேசன் மேற்பார்வையில் சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லுாரி என்.என்.சி., என்.என்.எஸ்.., மாணவர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.