மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம் பெருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதானம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிகிழமை நடைபெறும் தீமிதி திருவிழாவில் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம். இதேபோல் கோயிலில் வருடம் தோறும் ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் மகா சண்டி ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சண்டிஹோமம் நேற்று நடைபெற்றது. சண்டிஹோமத்தை முன்னிட்டு முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, அஸ்வபூஜை நடைபெற்றது. யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் அதனை அடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆலய தர்மகர்த்தா நடராஜ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.