பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
06:07
ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள். சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. திருமாலுக்கு இணையானவர் என்று ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் போற்றுகிறார்.
விஷ்ணுவின் சக்கரத்தை "சுதர்சனம் என்பர். இதற்கு "நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும் (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும். தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சுதர்சனம் - சக்கரம்
ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!
பொருள்: தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.