பதிவு செய்த நாள்
08
ஜூலை
2022
10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரர் மீண்டும் யானைக்கல் லாலா ஸ்ரீரங்கம் சத்திரத்தில் எழுந்தருளுவார்களாக என 30 ஆண்டுகளாக பக்தர்கள் காத்திருக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் ஆனி ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பானது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில்தினமும் அம்மனும், சுவாமியும் லாலா ஸ்ரீரங்கம் சத்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். நாயக்கர் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருந்து இந்த நடைமுறை இருந்து வருகிறது.கடந்த 1992-93ல் வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சத்திரத்தில் அம்மனையும், சுவாமியையும் எழுந்தருள செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து சத்திர டிரஸ்டிகளிடம் கோயில் அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து, கோயிலுக்குள் விழா நடத்தப்பட்டது. அதன் பிறகு 30 ஆண்டுகளாக ஆனி ஊஞ்சல் உற்ஸவம் கோயிலுக்குஉள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது.பக்தர்கள் கூறுகையில், கொரோனா காலத்திற்கு பிறகு அம்மனும், சுவாமியும் வீதி உலா வரும்போது, லாலா சத்திரத்திலும் எழுந்தருள செய்வதில் என்ன சிரமம் என்று தெரியவில்லை. காலம் காலமாக நடந்து வந்த நடைமுறை தற்போது அழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் சத்திரத்தில் எழுந்தருள செய்ய வேண்டும் என்றனர்.சத்திர அறங்காவலர்பத்ராவதி தரப்பில் கூறுகையில், மதுரை மட்டுமின்றி ராமேஸ்வரம், பழநி, ஸ்ரீரங்கம், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் நாங்கள் கட்டளைதாரர்களாக உள்ளோம். வெள்ளத்திற்கு பிறகு யானைக்கல் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்ததால் அம்மன், சுவாமியை எழுந்தருள செய்வதில் சிரமம் இருந்தது. தற்போது மீண்டும் எழுந்தருள செய்ய வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். பரிசீலிப்பதாக தெரிவித்துஉள்ளனர் என்றனர்.