பதிவு செய்த நாள்
08
ஜூலை
2022
04:07
சென்னை, : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக துவங்கியது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். இத்தலத்தில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நரசிம்ம பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடந்தது.நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு, சிம்ம வாகனத்தின் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலிக்கிறார். நாளை கருடசேவை விழா நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கவெனிதா செய்துள்ளார்.