மானாமதுரை அருகே விளாக்குளத்தில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2022 04:07
மானாமதுரை: மானாமதுரை அருகே விளாக்குளத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று பெரிய மாடு சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயமும் அதனைத் தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெற்றது.
விழாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா 3 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு விளாக்குளம் கிராமத்தில் இருந்து மானாமதுரை வரை பெரிய மாடுகள்,சின்ன மாடுகள் பிரிவில் எல்கை பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 ஜோடி மாடுகளும், அதற்கடுத்து நடந்த சின்ன மாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.இதில் பெரிய மாடுகள் பிரிவில் மேலூர் ஆட்டுக்குளம் நகுல் நீலா மாடுகள் முதலிடமும், விளாக்குளம் ஊராட்சி தலைவர் செல்வம் மாடுகள் 2ம் இடமும், மானாமதுரை கொம்பையா காளிமுத்து மாடுகள் 3ம் இடமும் பெற்றன. சின்ன மாடுகள் பிரிவில் மறவர் கரிசல்குளம் கருப்புத்துரை காளீஸ்வரி மாடுகள் முதலிடமும்,பெரிய மங்கலம் தெய்வேந்திரன் மாடுகள் 2ம் இடமும், வெள்ளலூர் ஆலம்பட்டி தாயமங்கலம் முத்துமாரி மாடுகள் 3ம் இடமும் பெற்றன.வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் விளாக்குளம் கிராமத்தின் சார்பில் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மானாமதுரை- தாயமங்கலம் ரோட்டில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் ரோட்டின் இரு பகுதியிலும் நின்று பார்வையிட்டனர். மாட்டுவண்டி பந்தயம் முடிந்த பிறகு நிறைகுளத்து அய்யனார் கோயில் வளாகம் முன்பாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெற்றது.இதில் 12க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் ,மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விளாக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர். இன்று ஆட்டுக்கிடா முட்டு சண்டை போட்டி நடைபெற உள்ளது.