பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
09:07
மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ பெருவிழாவில், கருட சேவை வாகனத்தில் நேற்று, சுவாமி வீதியுலா சென்றார்.மதுராந்தகம் ஏரி காத்த ராமர் எனும் கோதண்டராமர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.ஆனி மாத பிரம்மோற்சவ விழா ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 12 நாட்கள் விழா நடக்கிறது. மூன்றாம் நாள் முக்கிய விழாவான நேற்று, கருட சேவை நடந்தது.காலை 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கருணாகர பெருமாள் எழுந்தருளி, கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், நகரின் முக்கிய வீதிகளான சன்னிதி வீதி, தேரடி வீதி, வன்னியர் பேட்டை பகுதி, சூணாம்பேடு ரோடு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக திருக்கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து, பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.