திருக்கோளக்குடி திருக்கோளநாதர் அம்மன் ஆனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 12:07
பூலாங்குறிச்சி: திருப்புத்தூர் ஒன்றியம் திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 2ல் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தினசரி காலையில் மண்டகப்படி தீபாராதனையும், இரவில் வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் திருவீதி வலம் வந்தனர். நேற்று ஒன்பதாம் திரு நாளை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியை வழிப்பட்டனர். காலை 10:00 மணி அளவில் தேவஸ்தான ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேர்வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. மாலை 3.50 மணிக்கு பக்தர்கள் தேரை நிலைக்கு கொண்டு வந்தனர். சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர். பின்னர் இரவில் தேர் தடம் பார்த்தல் நடந்தது. இன்று காலையில் தீர்த்தம் வழங்குதலும், இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை சுவாமி மலைக்கு ஏறுதலுடன் விழா நிறைவடைகிறது.