சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும்வழியில் செவ்வாப்பேட்டை ரோடு ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் மூன்று கி.மீ தொலைவில் கிளாம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டியதாகக் கல்வெட்டுச் செய்திகள் சொல்கின்றன. இங்குள்ள அம்மன் அகிலாண்டேஸ்வரி மூன்று திருக்கண்களைக் கொண்ட முக்கண் நாயகியாக அருள்பாலிக்கிறாள். அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்யும்போது இந்த மூன்றாவது திருக்கண்ணைத் தரிசிக்கலாம். இந்த அம்பிகையை வழிபடுவதால் கல்வி, வீரம், செல்வும் ஆகிய மூன்றும் வளங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். பிரதோஷ வழிபாடு, பவுர்ணமி வழிபாடு, ஆவணி மூல நட்சித்திர தினத்தில் பிட்டு உத்ஸவம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை சோம வார வழிபாடு, கார்த்திகை தீபம், மகர சங்கராந்தி, மாசியில் மகா சிவராத்திரி பூஜை போன்ற வைபங்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.