நாம் எத்தனையோ பேர், விதவிதமான வேலைகளைச் செய்கிறோம். அதற்கான ஊதியமாக பணத்தைப் பெறுகிறோம். ஆனால் இந்த உயிருக்கு ஊதியம் தர நினைத்ததுண்டா? வள்ளுவர் சொல்கின்றார் இந்த உயிருக்கு ஊதியம் இரண்டு வகையில் தர முடியும். ஒன்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுத்தல்; அத்தகைய அறச் செயல்களைச் செய்து புகழோடு வாழுதல். இதுவே உயிருக்கான ஊதியம் ஆகும். அப்படி கொடுத்தல் என்பது எளிதான செயல் அல்ல. ஒருவர் பேனாவைக் கேட்டால் உடனேயே மூடியைக் கழற்றி வைத்துக் கொண்டு பேனாவைக் கொடுக்கிறோம். அத்தனை முன்னெச்சரிக்கை. கொடுப்பது என்பது பிறவியிலேயே வர வேண்டும். கொடையும், தயையும் பிறவிக்குணம் என்பார் அவ்வையார். கொடுக்காதவனைப் பாரி வள்ளலே என பாராட்டினாலும் கூடக் கொடுக்க மாட்டான் என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். கொடுப்பது என்பது சக மனிதனுக்கு மட்டுமல்ல, எறும்பு தொடங்கி எல்லா உயிர்களுக்கும் தான். பற்றிப் படரக் கொம்பில்லாமல் இருந்த முல்லைக் கொடிக்குத் தன் தேரினை கொடுத்து விட்டுப் போனான் என்பதால் தான் நாம் இன்றும் வள்ளல் பாரியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை. கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை என்பது பழமொழி. ஆயினும் கர்ணனால் கூட சிந்திக்க இயலாத ஒருவரை நம் மண்ணிலே பெற்றிருந்தோம். ஆம். அறுபத்துமூன்று நாயன்மார்களிலே ஒருவரான இயற்பகை நாயனார். உலக இயல்பு என்னவென்றால் எதையும் தனக்கென வைத்துக் கொள்வது. ஆனால் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் கேட்கும் அனைத்தையும் அள்ளி வழங்கி உலக இயல்பிற்குப் பகையாக இருப்பதால் அவருக்கு ‘இயற்பகை’ என்ற பெயர் வந்தது. யார் எப்பொருளைக் கேட்டாலும் உடனே அள்ளி வழங்கும் இயல்புடைய இயற்பகை நாயனார் காவிரிப் பூம்பட்டினத்திலே வாழ்ந்து வந்தார். ஒருநாள் அடியவர் ஒருவர் அவரைத் தேடி வந்தார். அவரை வரவேற்று, உபசரித்து, பாதங்களைக் கழுவி, சந்தன குங்குமமிட்டு, மலர் துாவி தன் மனைவியுடன் வீழ்ந்து வணங்கி எழுந்து தங்களுக்கு யாது செய்ய வேண்டும்? எனக் கேட்டார். இயற்பகையாரே! தாங்கள் எது கேட்டாலும் உடனே தருவதாக அறிந்தோம். எனவே உம்மை நாடி வந்தோம் என்றார் அடியவர், இயற்பகையார் பணிந்து வணங்கி எல்லாம் ஈசன் தந்தது. அவர் தந்ததை அவர் அடியவர்களுக்கு வழங்கும் பேறு பெற்ற வேலைக்காரனாகவே உள்ளேன். எனவே தங்களின் தேவை தெரிந்தால் அவனருளாலே தந்து மகிழ்வேன் என்றார். உடனே அடியவரும் நீங்கள் உங்கள் காதல் மனைவியை அடியவனுக்குத் தரவேண்டும் என்று கேட்டார். சற்றும் யோசிக்கவில்லை. மகிழ்ச்சி அடியேன் பேறு பெற்றேன் என சொல்லி தன் உயிரான மனைவியை நோக்கினார். அவரும் முதலில் ஒரு கணம் சற்றுத் திகைத்தார். உடனேயே தெளிந்து அடியார் அருகில் வந்து நின்றார். இச்செயலைக் கண்ட உறவினர்கள் தடுக்க, அவர்களை வீழ்த்தி அடியவரைத் தன் மனைவியுடன் ஊரின் எல்லைப் பகுதி வரை கொண்டு போய் விட்டு விட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்தார். இவரின் கொடைத் திறத்தையும், உறுதிப் பாட்டையும் கண்ட அடியவர் வடிவில் வந்த சிவன், ‘‘இயற்பகை முனிவா ஓலம்’’ என மூன்று முறை ஓலமிட்டு அழைத்தார். அடியவருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்ததோ எனக் கலங்கி உடனே திரும்பினார். அங்கே உமையவளோடு தர்மமெனும் காளை வாகனத்தில் காட்சி தந்து அருளினார் சிவன். என்றும் எல்லோர்க்கும் அள்ளித் தந்து எல்லா சுகங்களையும் அனுபவித்து எம்முடன் கலப்பீர்களாக என்று அருள்புரிந்தார். முடியுமா என்ன? கற்பனையில் கூட வராது. கொடுப்பது என்பது பிறவியிலேயே வரவேண்டும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் கொடுக்க வேண்டும். அப்புறம் என நினைத்தால் இவ்வளவு கொடுக்க வேண்டுமா? நாம் மட்டும் தான் கொடுக்கிறோமா? என்றெல்லாம் நினைத்துக் கடைசியில் நாம் நினைத்த பெரியதொகை கருதாது வந்து நிற்கும். கொடுப்பது என்பது அத்தனை உயர்ந்த செயல். அப்படி ஒருவர் கொடுக்கும் போது அதனை தடுப்பது இருக்கிறதே அது பெரும் பாவம். பெரும்பாலும் கொடுக்கும் வள்ளல்களைச் சுற்றி இப்படி ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்கு இது தான் வேலை. அங்கு மட்டுமல்ல, சாதாரண இடங்களில் கூடத்தான். கோயிலுக்குத் தேங்காய் வாங்கச் சென்றால் உடனே கடைக்காரர் கேட்பார் அர்ச்சனைக்கா? சிதறுகாயா? என்று. ஏன் சிதறுகாயைப் பெரிய காயாக வாங்கி உடைக்கக்கூடாதா? பெரிய காயைத்தான் சிதறு காயாக உடைக்க வேண்டும். அவர் மனதில் நமக்கு மிச்சம் ஏற்படட்டுமே என்ற பரந்த (?) உள்ளம் தான் கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு வஸ்திரம் எடுக்கப்போனால் ஜவுளிக் கடைக்காரர் சொல்லுவார் சாமிக்குத் தானே இது போதும் என்று. கோயிலை விடுங்கள் நம் வீட்டில் நடைபெறும் ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிக்கு பணிபுரியும் கீழ்நிலைப் பணியாளர்களுக்கு ஆடைகள் வாங்கப் போனால் அவர்களுக்குத் தானே... இதுவே போதும் என்று சொல்பவர்களும் உண்டு. நமது அன்றாட வாழ்வில் நமது பலப்பல பணிகளைச் சுலபமாக்குகின்ற, உதவக் கூடிய பணியாளர்களுக்கு நல்ல உயர்ந்த ஆடைகளை வழங்கத்தான் வேண்டும் என்று நாம் மட்டும் உறுதியாக இருந்து விட்டால் இவர்கள் போன்றவர்களை புறந்தள்ளி விடலாம் தானே. கொடுப்பதைத் தடுப்பது மகாபாவமாகும். இன்றல்ல. நேற்றல்ல புராண காலங்களில் இருந்தே இதனைச் செய்பவர்கள் இருக்கிறார்கள். மஹாபலிச் சக்ரவர்த்தி அசுவமேத யாகம் செய்தார். அவர் நல்ல பக்தன் தான். ஆயினும் தலைக்கனம் கொஞ்சம் இருந்தது. பக்திக்கு தலைக்கனம் பகை தானே! எனவே ஒரு நல்ல பக்தனை தடுத்தாட்கொள்ள விரும்பினார் விஷ்ணு. எனவே யாக சாலைக்குள் வாமன (குறளனாக) வடிவில் நுழைந்தார். அனைவரும் வியக்கும் வண்ணமாகமேனிப் பிரகாசம் ஜொலித்தது. மகாபலியின் குரு அசுரகுருவான சுக்ராச்சாரியார் அவர் பகவானை அடையாளம் கண்டு கொண்டார். ஆயினும் வெளிக்காட்டாது அமைதியாக இருந்தார். வாமனரை மகாபலி முறைப்படி வரவேற்றார். தாங்கள் கோடி சூரிய ஒளியாகக் காட்சி தருகின்றீர்கள். தாங்கள் இங்கே எழுந்தருளியது எங்களின் பெரும்பேறு. எனவே தாங்கள் விரும்புவதைத் தந்திடச் சித்தமாக உள்ளனே் என்றான் மகாபலி. வாமனரும் சிரித்துக் கொண்டே என் பாதங்களால் மூன்று அடி மண் மட்டும் போதும் என்றார். மகாபலியோ இங்கே கொட்டிக் கிடப்பவை மலையளவு கணக்கிலடங்காதது. நீங்கள் கேட்பதோ கடுகளவு. யோசித்து நிறையக் கேளுங்கள் என்றான். வாமனரும் சிரித்துக் கொண்டே மூன்றடி மண் போதும் என்றார். அருகிலிருந்த சுக்ராச்சாரியார் இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது எனக் கருதி மகாபலியைத் தனியே அழைத்து வந்திருப்பது கடவுள் மகாவிஷ்ணு. அவர் கேட்பதிலே ஏதோ சூழ்ச்சி உள்ளது கொடுக்காதே என்றார். அதற்கு மகாபலியோ கடவுளுக்கே கொடுக்கும் நிலையில் நான் இருந்தால் என்னைவிட உயர்ந்தவனாக யார் இருக்க இயலும். மேலும் கொடுப்பதால் தான் புகழ் வருகிறது. இவ்வுலகில் பிறவியெடுத்தவர் கொடுப்பதால் தான் என்றும் அழியாமல் இருக்கின்றனர். உயிர் நிலையில்லாதது. புகழ் மட்டுமே நிலையானது. எனவே யார் எதைக் கேட்டாலும் நான் கொடுப்பது என்ற உறுதியுடன் தான் இந்த மாபெரும் யாகத்தைத் தொடங்கியுள்ளேன். எனவே நீங்கள் தடுக்காதீர்கள் அது உங்கள் உயர்விற்கு அழகல்ல என்றான். இருப்பினும் சுக்ராச்சாரியரோ மகாபலி உன் நன்மைக்காகவே சொல்கின்றேன். இவருக்குக் கொடுக்கவேண்டாம் என்றார். மகாபலி உறுதியாக இருந்தான் மனைவி கையில் கமண்டலத்தைக் கொடுத்து நீர்வார்க்கச் சொல்லி, தான் தானம் தரத் தயாராக இருந்தான். அப்பொழுது சுக்ராச்சாரியார் ஒரு வண்டு உருவம் எடுத்து கமண்டலத்திலிருந்து நீர் கீழே விழாதவாறு அடைத்துக் கொண்டு இருந்தார். மகாபலி மனைவியைப் பார்க்க, மகாராணியோ நான் சரித்தும் நீர் கீழே வரவில்லையே என்றார். உடனே வாமனரோ தனது இடுப்பில் இருந்த தர்ப்பையினால் அடைத்திருந்த சுக்ரனின் கண்களைக் குத்தினார். சுக்ராச்சாரியார் வெளியே வர, நீர் வழிந்தது. வாமனருக்கு மூன்றடி மண்ணைத் தந்தான் மகாபலி. பின்னர் அவர் ஈரடியால் மண்ணையும், விண்ணையும் அளந்து மூன்றாவது அடிக்கும் இடம் கேட்கத் தன் தலையையே தந்தான், உய்வு பெற்றான் என்பது வரலாறு. சுக்ராச்சாரியார் தர்மத்தை தடுத்ததால் கண் இழந்தார். இன்றைக்கும் சுக்கிரனுக்கு ஒரு கண் மட்டுமே என்று சொல்வது வழக்கம். கம்பர் தனது ராமகாதையில் இந்தப் பகுதியை இணைத்து ஈவதை விலக்கக்கூடாது என்ற பாடத்தை உலகுக்குக் காட்டுகிறார். வள்ளுவரோ ஒரு படி மேலே சென்று கொடுப்பதைத் தடுப்பவனுக்கு ஒரு வித்தியாசமான சாபத்தைக் கொடுக்கிறார். ஆம்... கொடுப்பதைத் தடுத்தால் அவனது உறவினர்கள், உடுப்பதற்கு ஆடையும், உண்பதற்கு உணவும் இன்றிக் கெட்டுப் போவர் என்கிறார். பதைத்துப் போய் நாம் கொடுப்பதைத் தடுப்பவனைத் தானே சாபமிட வேண்டும். அவனது உறவினர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்கள் மேல் ஏன் சாபம் போடுகிறீர்கள் எனக் கேட்டதற்கு உறவினர்கள் நன்றாக இருந்தால் இவனை யாராவது ஒருவர் இரக்கப்பட்டு இந்தப் பாவியை காப்பாற்றி விடுவர். உறவினர் இல்லாவிட்டால் இவனைக் காப்பாற்றுவார் யாருமின்றி துன்பப்படுவான் என்றார். எனவே கொடுப்பது என்பது உயர்ந்த செயல். அதை தடுப்பது என்பது பாவச்செயல் உறவினர் நன்றாக வாழவேண்டும் என ஒருவன் எண்ணினால் அவன் கொடுப்பதைத் தடுக்காது வாழ வேண்டும். இதனையே அவ்வையார் ஈவது விலக்கேல் என்றாள். நாமும் நம்மால் இயன்றதை உலகிற்குக் கொடுப்போம். நலம் பெறுவோம்.