கர்நாடகாவில் குல்பர்கா அருகில் உள்ள சிவத்தலம் காலிகே. சித்ராவதி நதி பாயும் இத்தலத்தை ‘தட்சிண காசி’ (தென்னக காசி) என போற்றுவர். இங்குள்ள சிவன் கோயிலில் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகங்களைக் குறிக்கும் விதத்தில் நான்கு சிவலிங்கங்கள் இருக்கின்றன. கலியுகத்தின் கொடுமையால் இந்த கோயில் வளாகத்திற்குள் ஒன்பது கொலைகள் நடந்தன. அதன் பின்னர் வழிபாடின்றி கோயில் பாழடைந்தது. மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த விரும்பிய ஊர் மக்கள், ‘மகான்கள் யாரையாவது கோயிலுக்கு அழைத்து வந்தால் நன்மை ஏற்படும்’ எனக் கருதினர். அதற்காக சதாசிவராவ் என்பவரின் உதவியை நாடினர். மகானான காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தால் தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார். அந்த சமயத்தில் சுவாமிகள் மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரத்தில் முகாமிட்டிருந்தார். ஒரு கார்த்திகை மாத ஏகாதசி நாளில் தரிசிக்கச் சென்ற சதாசிவராவ், காலிகே சிவன் கோயிலில் நடந்த அவலத்தைச் சொல்லி தாங்கள் நேரில் வந்தால் நல்லது என வேண்டினார். ‘எந்த செயலையும் தன் இஷ்டத்திற்குச் செய்ய முடியாது என்பதால் உடனடியாக வர இயலாது’ என மறுத்தார். இதை அறிந்த காலிகே ஊர் மக்கள் மிகவும் வருந்தினர். மறுநாள் பிரதோஷ பூஜையை முடித்த சதாசிவராவ், நடமாடும் தெய்வமான காஞ்சி மஹாபெரியவர் காலிகே வரும் வரை உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்தார். ஸ்ரீகண்டன் என்னும் தொண்டர் மூலம் சதாசிவராவை வரவழைத்து காலிகேவுக்குத் தான் வரவிருப்பதாக தெரிவித்தார் மஹாபெரியவர். ‘‘சுவாமிகளுக்கும், தனக்கும் இடையே உள்ள உறவு ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான அன்பு போன்றது. அந்த எண்ணத்துடன் தான் உண்ணாநோன்பு இருந்தேனே தவிர அவரை கட்டாயப்படுத்தும் எண்ணம் இல்லை’’ என சதாசிவராவ் விளக்கமளித்தார். காலிகே சிவன் கோயிலில் மஹாபெரியவரின் முன்னிலையில் சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அவரது பாதம் பட்டு பவித்ரம் அடைந்த இக்கோயில் இன்றும் அவரது பெருமையை நிலைநாட்டுக் கொண்டிருக்கிறது.