பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
10:07
காஞ்சிபுரம் : ஆடி மாத பிறப்பான முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்தது.ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால், ஆடி பிறந்தது முதல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, ஆடி முதல் ஞாயிறான நேற்று காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள பரஞ்சோதி அம்மனுக்கு, ஆடித்திருவிழா நடந்தது.அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.
இதில், அலங்கரிக்கப்பபட்ட பரஞ்சோதி அம்மன் நகரீஸ்வரர் கோவில் தெரு, வைகுண்ட பெருமாள் கோவில் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதியில் வீதியுலா சென்றது.பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் வர்ணித்து கும்பம் படையலிடப்பட்டது.இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாய் படவேட்டம்மன் கோவிலில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் பல்வேறு வீதிகள் வழியாக உலா வந்தார். பகல் 12:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. காஞ்சிபுரம் வெள்ளக் குளம் சந்தைவெளி அம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.