பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
05:07
பல்லடம்: பல்லடம் அருகே, ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி, அழகு நாச்சி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வதம்பச்சேரி ஊராட்சி நல்லூர்பாளையத்தில், அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா, ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தியபடி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருவது இக்கோவிலின் சிறப்பம்சம்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், பல நூறு ஆண்டுக்கு முன், நல்லூர்பாளையம் கிராமம் வழியாக சென்ற ஆங்கிலேயர் படை, இங்குள்ள பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த பெண்கள், இங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பெண்களை விரட்டி வந்த ஆங்கிலேயர்களுக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் சரியாகும் என ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படியே, அவர்களுக்கு கண் பார்வை சரியானது. இதையடுத்து, அழகு நாச்சி அம்மனுக்கு பட்டு, மற்றும் கதர் சேலைகள் வழங்கி அம்மனை வழிபட்டுச் சென்றதாக வரலாறுகள் கூறுகிறது. அழகு நாச்சி அம்மன் எனும் பெயர் கொண்ட இந்த அம்மன், பெண்களுக்கு அடைக்கலம் அளித்ததால் அன்று முதல் அடைக்கல அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இது நடந்தது ஒரு ஆடி மாதம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆடி மாதம் வழிபாடு முடிந்ததும் புடவை பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்றனர்.