காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் சாலைத்தெருவில் உள்ள குளக்கரை மாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜையுடன் ஆடித்திருவிழா இன்று துவங்குகிறது. பெரிய காஞ்சிபுரம் சாலைத்தெருவில், குளக்கரை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா இன்று மாலை 4:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, குளக்கரை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 7:00 மணிக்கு பாடகர் கருமாரி கருணாவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் உற்சவமான நாளை மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் விசேஷ அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு சஞ்சீவி ராஜா சுவாமிகள் மாணவ-மாணவியருக்கு நோட்டுபுத்தகம் வழங்கி ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார். இரவு 7:30 மணிக்கு பரதாலயா நாட்டிய பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான வரும், 24ல் காலை 7:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டுதலும், 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிடுகின்றனர்.இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், புஷ்ப விமானத்தில் எழுந்தருளும் குளக்கரை மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வருகிறார்.