திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அம்பாள் சன்னதி கொடிமரத்தில் காலை ௬.௩௦ மணிக்கு கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கிறது. காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 4ம் நாள் திருநாளான 25ம் தேதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. அப்போது சிறப்பு நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது. குழந்தைபாக்கியம் தாமதமாகும் பெண்கள் அம்பாளுக்கு வளையல் காணிக்கையாக வழங்கி, வளைகாப்பு உற்சவம் முடிந்தபிறகு அதை பிரசாதமாகவாங்கி, அணிந்து கொள்ளலாம். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. ஆடிப்பூரம் திருவிழாவில் 10ம் நாளான 31ம் தேதி இரவு 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்அய்யர்சிவமணி மற்றும் கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.