பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
02:07
ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் ஏற்பட்ட எல்லாவற்றுக்கும் ‘பெரிய’ என்ற அடைமொழி சேர்த்தே வழங்கப்படுகிறது. பெரிய கோயில், பெரியபெருமாள்,பெரிய பிராட்டியார், மேளம் பெரியமேளம், (பூஜை) பெரிய அவசரம்,(தளிகைககள்) பெரியதிருப்பணியாரங்கள் என்று அனைத்திற்கும் அடைமொழி சேர்த்தே குறிக்கப்படுகிறது. இதில் பெரிய திருப்பணியாரங்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு, இங்கு தயாராகும் உணவுப்பண்டங்களில் நெய் தாராளமாகச் சேர்க்கப்படுகிறது. (எதிலும்) எண்ணைய் சேர்க்கும் வழக்கமில்லை.
முற்காலத்தில் இங்கு வருவோர், ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி என்று கூறியபடி ஸ்ரீரங்கநாதரை சேவித்து அவரது (பொங்கலை) பிரசாதங்களை உண்டு மெய்மறப்பார்களாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளுக்கு வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல் (அரவணை), புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை, ரொட்டி, வெண்ணைய் ஆகியவை அன்றாடம் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அமுதுசெய்விக்கப்படுகின்றன. தாயாருக்கு மாலையில் நெய்புட்டு அமுது செய்விக்கப்படுகிறது, இவை தவிர உற்சவ கால நிவேதனங்கள் என்று சில தனிப்பட்ட பதார்த்தங்களும் பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படுகின்றன.இதில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாளுக்கு சம்பாரா தோசை எனப்படும் பெரியதோசையும்,செல்வரப்பம் எனப்படும் அரிசிமாவுத்தட்டையும் அமுது செய்விக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியின் நிறைவுநாளான ஆழ்வார் மோட்சத்தன்று, கடினமான ‘கேலிச்சீடை’ எனப்படும் உருப்படியையும் பெருமாள் அமுது செய்தபின் பக்தர்கள் வாங்கி உண்கின்றனர்.