ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் கோயில் மைசூரரை ஆண்ட விஜயரங்க சொக்கநாதரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது பெருமைகள் பல கொண்ட கற்பூர படியேற்ற சேவையைக் காணவிரும்பிய மன்னர் தானும் அதைக் காண ஆவல் கொண்டார். இதையடுத்து முறைப்படி ஓலையனுப்பி கோயிலுக்கு தகவல் தெரிவித்துமைசூரிலிருந்து தனது குடும்பத்தினருடன் யானை,சேனைகளுடன் ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டு வந்தார். அந்நாளில்வாகனவசதிகள் இல்லை என்பதால் விழாவுக்கு இரண்டுநாள் முன்னதாகவே அவர் ஸ்ரீரங்கம் சேரும் வகையில் அவரது பயணத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இயற்கை இடர்பாடுகளினால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்ரீரங்கத்திற்கு அவரால் வரமுடியவில்லை. அவர் ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்தபோது பெருமாள் கற்பூர படியேற்ற சேவை முடிந்து மூலஸ்தானம் சேர்ந்திருந்தார். கோயிலுக்கு வந்த மன்னர் தனக்காக மீண்டும் ஒரு முறை அந்த நிகழ்ச்சியை நடத்தும்படி உத்தரவிட்டார்.
ஆனால் கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் அதற்கு உடன்படவில்லை.அவர்கள் மன்னரிடம் “ எங்கள் பெருமாள் ‘ரங்கராஜா’ ஆவார். அவருக்காக மன்னர்கள் காத்திருக்கலாமே அவர் காத்திருக்க மாட்டார்.எனவே தாங்கள் அடுத்த ஆண்டே இனி அந்த சேவையை பார்க்கலாம் என்று உறுதி படக் கூறினர். இதைக் கேட்டவிஜயரங்க சொக்கநாதர்‘இறைவனுக்குப்பிறகுதான் மன்னன்’ என்ற உட்கருத்தைப் புரிந்து கொண்டார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் ஆலோசித்து வியக்கத்தக்க ஒரு முடிவை அறிவித்தார். அதன்படி எந்த காட்சியைக் காண ஸ்ரீரங்கம் வந்தாரே அதைப் பார்க்காமல் ஊர் திரும்புவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அடுத்த கைசிக ஏகாதசி வரை ஸ்ரீரங்கத்திலேயே தங்கியிருக்க முடிவுசெய்து, தனது ராஜாங்க நிர்வாகத்தையே தற்காலிகமாக ஸ்ரீரங்கத்திற்கு மாற்றிக் கொள்வதாகவும் அறிவித்து அதன்படி ஸ்ரீரங்கத்திலேயே தங்கியிருந்து மறு ஆண்டு கைசிக ஏகாதசியன்று விழித்திருந்து புராணம் கேட்டபின் கற்பூர படியேற்ற சேவையையும் கண்டபிறகே அவர் ஊர்திரும்பினார்.
இந்த சரித்திர சம்பவத்தை நினைவு கூறும் வகையில் இன்றும் மன்னர் விஜயரங்க சொக்கநாதர் ஸ்ரீரங்கம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் காத்திருந்து கற்பூர படியேற்ற சேவையை தரிசித்த இடத்தில் மன்னருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விலை மதிக்க முடியாத தந்த சிற்பங்கள் நிர்மாணித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த தந்தச்சிலைகளை கண்ணாடிப்பேழைக்குள் இன்றும் நாம் அந்த இடத்தில் காணலாம். இச்சம்பவத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயில் விழாக்கள் உற்சவங்கள் யாவும் கால நிர்ணயப்படி உரிய நேரத்தில் நடந்து விடும் என்பதும், பெருமாள் யாருக்காகவும் காத்திருக்க மாட்டார் என்பதும் குறிப்பால் உணர்த்தப்டுவதாக உள்ளூர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.