பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
04:07
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சப்த கன்னியம்மன் கோவிலில், ஆடி கூழ்வார்த்தல் உற்சவம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோவில், பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதாக, பக்தர்கள் கருதுகின்றனர்.தற்போது, தொல்லியல் துறை நிர்வாகத்திடம் உள்ள இக்கோவிலில், பல நுாற்றாண்டுகள் வழிபாடு இல்லை.எனவே, இக்கன்னியர் வழிபாட்டிற்காக, இவ்வூர் அண்ணா நகரில், பாரம்பரிய காட்டுநாயக்கர் வழிபட்ட கன்னியருக்கு, கற்சிலைகளுடன் கோவில் அமைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.இக்கோவிலில், ஆடி கூழ்வார்த்தல் உற்சவம், இரு நாட்கள் கோலாகலமாக நடந்தது. கடந்த 23ல், கருக்காத்தம்மன் கோவிலிலிருந்து, பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து, பிற கோவில்களில் வழிபட்டு, மதியம் கன்னியர் கோவிலை அடைந்தனர். சிறப்பு வழிபாடுக்கு பின், அம்மனை தரிசித்தனர். நேற்று முன்தினம் காலை, கடலில் புனித நீராடி, கரகத்தில் கடல் நீர் நிரப்பி, சப்த கன்னியரை பக்தர்கள் எழுந்தருள செய்தனர்.கோவிலை அடைந்து, பகலில் சிறப்பு வழிபாடு நடத்தி, கஞ்சி, கூழ் வார்த்தனர். இரவு கும்ப வழிபாடு நடத்தி, கன்னியரை தரிசித்து வழிபட்டனர்.