காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், சாலைத் தெருவில் உள்ள குளக்கரை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நிறைவு பெற்றது.பெரிய காஞ்சிபுரம், சாலைத் தெருவில், குளக்கரை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு ஆண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த 22ல், மாலை 4:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது.குளக்கரை
மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 23ல் மாலை 5:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு விசேஷ அலங்காரம் நடந்தது.பாம்பன் அருட்சித்தர் சஞ்சீவி ராஜா சுவாமிகள் மாணவ - மாணவியருக்கு நோட்டுப்புத்தகம் வழங்கி ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இரவு 7:00 மணிக்கு பரதலயா நாட்டிய பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை 11:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.இரவு 8:00 மணிக்கு புஷ்பக விமானத்தில் எழுந்தருளிய குளக்கரை அம்மன் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.