ஸ்ரீரங்கம் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தின் கிழக்குப்பகுதியில் வெள்ளை கோபுரத்திற்கு அருகில் உள்ளது இந்த பிரமாண்ட மண்டபம், அந்தக் கால கட்டடக்கலைக்கு சான்று கூறுவதாக இம்மண்டபம் விளங்குகிறது. மண்டபத்தின் நடுவே திருமாமணி மண்டபம் என்ற அழகிய சிறிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரதம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் ஆஸ்தானமிருந்து அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழிப்பாசுரங்களைக் கேட்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபத்தின் முன்புறம் உள்ள சிறிய நான்குகால் மண்டபத்தில் மாட்டுப்பொங்கலன்றும், (கனு) பின்புறம் உள்ள மண்டபத்தில் தைப்பொங்கலன்றும் (சங்கராந்தி) பெருமாள் எழுந்தருள்வார் என்பது முக்கிய செய்தியாகும்.
ஆயிரங்கால் மண்டபம் எனக் கூறப்பட்டாலும், இதில் 960 கல்தூண்களே உள்ளன. காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்திற்காக இந்த மண்டபத்தின் தெற்கில் காலி இடம் விடப்பட்டிருக்கிறது. இந்த காலி இடத்தில் உற்சவ நாட்களில் 40 தென்னைமரக்கால்கள் நட்டு பந்தல் அமைத்து ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருக்கேற்ப மண்டபம் முழுமைபெறுவதாகவும் கூறப்படுகிறது.