ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரில் சற்று தொலைவில் அக்கால சிற்ப கலைக்குச் சான்றாக சேஷராயர் மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை சித்தரிக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வடக்கு முகப்பில் பிரமாண்ட சில்ப தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குதிரைவீரர்கள் போர்புரிவது, வன
விலங்குகளை வேட்டையாடுவது போன்ற காட்சிகள் உயிரோட்டத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுத்தைப்புலிகளின் மீது செவ்வரிகளோடுவது சிற்பத்தின் உயிரோட்டத்தைக் காட்டுகிறது. போர்வீரன் சிறுத்தையை வேட்டையாடும்போது, அவனது கூரிய வாள் சிறுத்தையின் உடலில் பாய்ந்து வெளியே வருவது போன்று இயல்பாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களை விட்டு அகலாது. ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபம் தமிழக சுற்றுலாத்தலங்கள் வரிசையில் முக்கிய இடம்பெற்றிருப்பது இம் மண்டபத்திற்கு மட்டுமல்ல, ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், தமிழக சிற்பக்கலைக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.