பதிவு செய்த நாள்
04
ஆக
2022
01:08
பேரூர்: பேரூரில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், படித்துறையில், ஆடிப்பெருக்கையொட்டி முன்னோர்களுக்கு படைக்கப்பட்ட படையலை சேகரித்து, ஆதரவற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆடிப்பெருக்கையொட்டி, பேரூர் படித்துறையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்து தங்களின் முன்னோர்களுக்கு படையல் படைத்து வழிபட்டனர். இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, கிருஷ்ணா கல்லூரி மற்றும் ஹிந்துஸ்தான் கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் நேற்று அதிகாலை முதல், பொதுமக்கள் தங்களின் பித்ருக்களை வழிபட்ட பின், அந்த படையலில் படைக்கப்பட்டிருந்த இனிப்பு பலகாரங்கள், பழங்கள், உணவு, புத்தாடைகளை பெற்று சேகரித்தனர். இதில், சேகரிக்கப்பட்ட உணவு பொருட்களை நோ புட் வேஸ்ட் என்ற அமைப்புடன் சேர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு வழங்கினர். அதோடு, ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் மற்ற பொருட்களை வீசினால், ஏற்படும் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனால், ஏராளமான பொதுமக்கள், தங்கள் முன்னோர்களை வழிபட்ட பின், தாங்கள் படைத்த படையல்களை தாமாக முன்வந்து, ஆதரவற்றோர்களுக்கு வழங்குமாறு, படையலை வழங்கி சென்றனர்.